Wednesday, October 1, 2008

கல்வெட்டு நினைவுகள்...


காலப்போக்கில் காணமல் போய்வரும் சாதனங்களில் ஒன்று சிலேட்டு . அனேமாக இந்த பதிவை படிக்கும் தோழர்கள் அனைவரும் சிலேட்டை பயன்படுத்தியிருப்போம்.

பள்ளிக்கூடம் செல்லும் முன்பே சிலேட்டு என்ற எழுது சாதனம் எனக்கு அறிமுகமாயிருந்தது. அந்த கல் சிலேட்டு அப்பா வாங்கிவந்த சில மணித்துளிகளிலேயே என்னால் உடைக்கப்பட்டாலும் என் நினைவுச்சிறைகளில் இன்னும் உடையாமல் பத்திரமாக இருந்துவருகிறது.

பல்ப்பம் என்றழைக்கப்படும் சிலேட்டு குச்சி கொண்டு எழுத கற்றுக்கொடுத்த முதல் ஆசான் என் அப்பா தான். நான் எத்தனை முறை உடைத்தாலும் புதுசு வாங்கி கொடுப்பாரே தவிர ஒரு முறைகூட அதட்டியதோ அடித்ததோ கிடையாது. அது என்னவோ தகர சிலேட்டை விட கல் சிலேட்டின் மீது அப்பாவிற்கு அதிக இஷ்டம், எனக்கு அதிகம் கிடைத்ததும் கல் சிலேட்டுதான்.

சிலேட்டு குச்சி பெரியதாக உடையாமல் வேண்டுமெனக்கு. தினமும் பள்ளி கிளம்பியதும் எதை மறந்தாலும் ஒரு குச்சி புதியதாக எடுக்க மறப்பதில்லை. சிலேட்டில் எச்சில் தொட்டு அழித்து ஓன்னாம் வகுப்பு வாத்தியாரிடம் அடி வாங்கிய பொழுதுகள் இன்னும் அழியாமல் மனதில் இருக்கின்றன.

சிலேட்டின் கருமை நிறத்தை கூட்ட கோவலை இலையும் கரியும் சேர்த்து தடவுவோம். சிலேட்டோடு சேர்ந்து சட்டையும் கருமையாகிப்போவும்.

எனது சிலேட்டுகள் எனக்கு எந்த அளவு உபயோகப்ப்ட்டதோ அதே அளவு என் அம்மாவுக்கு பால்
கணக்கு பார்க்கவும் சித்திக்கு கோலம் போட்டு பார்க்கவும் தம்பி தங்கைக்கு விளையாடவும் உதவியிருக்கிறது.

அகர முதல எழுத்துகலெல்லாம் கல் சிலேட்டிலிருந்தே அறிமுகமாயின எனக்கு. உடைந்து போன சிலேட்டுகள் எல்லாம் உடையாத கல்வெட்டு நினைவுகள் எனக்கு.


நீங்கள் இதை படித்துக்கொண்டிருங்கள், நான் சற்று பின்னோக்கி நினைவுகளை திருப்புகிறேன்,

அட,
அதோ வாயில் வைத்து மென்று முனை ஊறிய மாட்டிக்கிற பையில் கல் சிலேட்டு குச்சியோடு
நான் பள்ளி சென்றுகொண்டிருக்கிறேன்....



உங்களின் சிலேட்டு நினைவுகளையும் அ-னா எழுதிய நாட்களையும்
பின்னூட்ட சிலேட்டில் எழுதிச்செல்லுங்களேன்.....

3 comments:

ஆயில்யன் said...

நல்லா இருக்குப்பா! நான் கூட பள்ளிகூடம் வுட்டு வரும்போது வெளையாடுறேன்னு சொல்லி சிலேட்டு பையை சுத்தி சுத்தி நெறைய வாட்டி உடைச்சுருக்கேன்! :((

Thamiz Priyan said...

நாங்களெல்லாம் அடுத்தவன் மண்டையை உடைப்பதற்கே நல்ல கனமான சிலேட்டா வாங்குவோம்.. ம்ம் அதெல்லாம் ஒரு காலம்

ராமலக்ஷ்மி said...

ஆமாங்க. ஒன்றாம் வகுப்பு வரை ஸ்லேட்டுதான். ஸ்லேட்டுக்கு கரி போடுவது, ஒரு க்ளாஸ் முடிந்ததும் அதை தண்ணீர் விட்டு கழுவிய பின் "என் சட்டை காயும் காக்கா சட்டை காயாது" எனப் பாடியபடி ஸ்லேட்டையும் தூய வெள்ளை சட்டையையும் மாறி மாறி தொடணும். இப்போ நம்ம சட்டை நல்ல கருகரு என மாடர்ன் டிசைனாகியிருக்கும்:)).ம்ம்ம், இதெல்லாம் பள்ளி நினைவுகள் என ஒரு பதிவா போடும் எண்ணமிருக்கு.


தமிழ் பிரியன் said...
//நாங்களெல்லாம் அடுத்தவன் மண்டையை உடைப்பதற்கே நல்ல கனமான சிலேட்டா வாங்குவோம்..//

:))))!